தேனி மாவட்டத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்தை கைவிடக்கோருகின்ற மக்களின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைவர் செல்லமுத்து, 'விவசாயிகள் பாதிப்படைகின்ற, அவர்கள் எதிர்க்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என்று அமைச்சர்கள் சட்டப்பேரவையில் கூறிக் கொண்டிருக்கும்போதே, புதிதாக ஐந்து இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு டெல்லியில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு சொல்வதற்கும், செய்வதற்கும், சம்பந்தம் இருக்காது. தமிழ்நாடு அரசு சொல்வதை மத்திய அரசு கேட்காத காரணத்தினால்தான் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து இத்திட்டத்திற்கு எதிராகப் போராடுகின்றோம்' என்றார்.