நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகியோரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதாக மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோர் மீது 120(பி), 419 மற்றும் 420 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மாணவரின் தாய் கயல்விழிக்கு இந்த வழக்கில் தொடர்பு ஏதும் இல்லாததால் அவர் சிபிசிஐடி காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிபிசிஐடி காவல்துறையினர் அழைத்து சென்றனர். முன்னதாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் பெறப்பட்டு தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.