நீட் தேர்வில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா சிபிசிஐடியினரிடம் அளித்த வாக்குமூலத்தில் மேலும் சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. விசாரணையின் அடிப்படையில், சென்னை எஸ்.ஆர்.எம்., பாலாஜி மருத்துவக் கல்லூரிகளில் படித்துவந்த மாணவர்கள் பிரவின், ராகுல் ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.
மூன்று பேரின் பிணை மனு மறுப்பு இவர்களைத் தொடர்ந்து நீட் தேர்வு குற்றச்சாட்டு எழுந்ததும் தலைமறைவாகிய தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் செப்டம்பர் 1ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்து பின் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் திருப்பமாக மாணவி ஒருவர் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் அர்ஜுனன் என்பவரது மகளான பிரியங்கா என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்தனர்.
சென்னை சவீதா மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரை செப்டம்பர் 12ஆம் தேதி தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து அன்றைய தினமே இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த மூவரின் சார்பில் பிணை கேட்டு அவர்களது வழக்கறிஞர்கள் சார்பில் தேனி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதன் மீதான விசாரணை இன்று தேனி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், வழக்கில் குற்றவாளிகள் அதிகம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுவதால் இவர்களின் பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
மேலும், மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி, மாணவர் இர்பான் ஆகியோரது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவர்களது வழக்கறிஞர் மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.