தமிழ்நாடு

tamil nadu

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

By

Published : Oct 15, 2019, 11:25 PM IST

Updated : Oct 16, 2019, 6:48 AM IST

lதேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவீன், ராகுல் அவர்களது தந்தையினர் சரவணன், டேவிஸ் ஆகியோரது ஜாமீன் மனுவை தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

neet exam forgery

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடையதாக சென்னை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல், மாணவி அபிராமி மற்றும் அவர்களது பெற்றோர் சரவணன், டேவிஸ், மாதவன் ஆகியோரை கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தேனி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தேனி சமதர்மபுரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி விஜயகுமார் முன்னிலையில் குற்றம் சுமத்தப்பட்ட ஆறுபேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதில், சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவீன், எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தைகள் சரவணன், டேவிஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சென்னை சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரின் சார்பில் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அக்டோபர் 4ஆம் தேதி மனு அளித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற போது சிபிசிஐடி ஆய்வாளர் சித்ராதேவி நேரில் ஆஜராகாததால், இவ்வழக்கு தள்ளிவைக்கப்பட்டு மீண்டும் நேற்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டது. நேற்று நீதித்துறை நடுவர் முன் ஆஜரான சிபிசிஐடி ஆய்வாளர், ஆள்மாறாட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் படித்த கல்லூரிகளின் சான்றிதழ்கள் சரிபார்த்த கமிட்டியிடம் நடைபெற்றுவரும் விசாரணை முடியவில்லை என்று விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து ஜாமீன் மீதான விசாரணையை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு இன்று எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவித்திருந்தார். இந்நிலையில் தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன் மாணவர்கள் பிரவீன், ராகுல் சார்பில் வழக்கறிஞர்கள் விஜயதினகரன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது அவர்கள், 'குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மையங்களில் முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்துள்ளனர். அதன் மூலம் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் உண்மையான சான்றிதழ் அளித்து கல்லூரி முதல்வர் முன்னிலையில் சேர்ந்தனர். இந்த வழக்கில் தாமாகவே காவல்துறையினரிடம் விளக்கம் அளிக்க வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை சிபிசிஐடியினர் விசாரணைக்காக அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மாணவர்கள் உதித்சூர்யா மற்றும் இர்பான் மீது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உறுதிப்படுத்திய சிபிசிஐடியினர், மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்ததை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை. மேலும், ஐந்து கேள்விகளுக்கு சிபிசிஐடி தற்போது வரை பதிலளிக்கவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்' என நீதிபதி முன் வாதிட்டனர்.

வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதி பன்னீர்செல்வம், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நால்வரின் வழக்கறிஞர் கூறுகையில், மாணவர்கள் பிரவீன், ராகுல் மற்றும் அவர்களது தந்தையினர் சரவணன், டேவிஸ் ஆகியோர் குற்றமற்றவர்கள். இவர்களின் சார்பில் தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.

Last Updated : Oct 16, 2019, 6:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details