நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் நான்கு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவீன், ராகுல் இவர்களது தந்தை சரவணன், டேவிஸ் மற்றும் மாணவி அபிராமி, அவரது தந்தை ஆகியோரை விசாரணைக்காக தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்து வந்தனர்.
பிரவீனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சிபிசிஐடியினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த மாணவர் பிரவீன் ஆள்மாறாட்டம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், ராகுல் மற்றும் அபிராமி ஆகியோரிடம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட மாணவர் பிரிவீன் உடல்நிலை பாதிப்பால் சோர்வடைந்தார்.
இந்நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிரவீனை தகுந்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் உடல் நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிபதி முன்பு ஆஜராவது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் இதை படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திடீர் திருப்பம் - மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் மீது டீன் புகார்!