நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் மாணவி பிரியங்கா என இதுவரை ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என பத்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. அதற்கு அடுத்தபடியாக அவர்களது பெற்றோர்களான வெங்கடேசன், சரவணன், டேவிஸ் மற்றும் முகமது சபி என நான்கு பேருக்குத் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் பிணை வழங்கியது. இதில் மாணவி பிரியங்காவின் தாயார் மைனாவதிக்கு மட்டும் பிணை கிடைக்காமல் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
இதற்கிடையே சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் என்பவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். தொழிலதிபரான இவரது மகன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கிடைத்த தகவலின்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவர் மற்றும் அவரது தந்தை ரவிக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் தாக்கல் செய்திருந்தனர். இதில் மாணவருக்கு மட்டும் பிணை வழங்கப்பட்டது. அவரது தந்தையான ரவிக்குமாரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று சரணடைந்த ரவிக்குமாரை சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரித்தனர்.