நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட பிறகு, இது குறித்த விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோரான சரவணன், டேவிஸ், முகமது சபி ஆகியோர் பிணை கேட்டு மதுரை உயர்நீதின்றக் கிளையில் மனு செய்தனர். இவ்வழக்குகளில் தொடர்புடைய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கிய நீதிமன்றம், அவர்களின் பெற்றோருக்கு பிணை வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் சிறையில் உள்ள மாணவர்களின் தந்தைகளான சரவணன், டேவிஸ், முகமது சபி ஆகிய மூன்று பேரின் நீதிமன்றக் காவல் முடிந்து, மூன்றாவது முறையாக இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர் செல்வம், அவர்களின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து, வரும் நவம்பர் 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.