நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் அவரது தந்தை டேவிஸ், பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பிரவீன் அவரது தந்தை சரவணன் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு பேரது ஜாமீன் மனு இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பன்னீர்செல்வம் முன் மாணவர்கள் பிரவீன் மற்றும் ராகுல் ஆகியோர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது பேசிய அவர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்கள் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. நீட் தேர்வை முறையாக எழுதி கலந்தாய்வில் அரசு கல்லூரி கிடைக்காத காரணத்தால் தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கல்லூரி முதல்வர் முன்னிலையில்தான் மாணவர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கையும் நடைபெற்றுள்ளது. சிறையில் உள்ள பிரவீன் மற்றும் ராகுல் ஆகியோருக்கும் ஆள்மாறாட்டத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என வாதிட்டனர்.