தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதிகளில் கடந்த 2007 ஆம் ஆண்டில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டு வந்த நக்சலைட் அமைப்பை சேர்ந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முக்கிய குற்றவாளியான காளிதாஸ் தப்பியோடிய நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள சோலையார் வனப்பகுதியில் அம்மாநில காவல்துறையினரிடம் பிடிபட்டார்.
இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகளின் விசாரணைக்காக கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கேரள மாநிலம், கண்ணூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட நக்சலைட் காளிதாஸ் பெரியகுளம் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பெரியகுளம் நீதிமன்றத்தில் நக்சலைட் ஆஜர் வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஜூலை 30ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவரை கண்ணூர் சிறைக்கு கேரள காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.