தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுக மக்களவைத் தலைவரும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் கருப்புக் கொடி காட்டுவதாக அறிவித்து கம்பம் பகுதியில் சாலையின் இருபறங்களிலும் நின்றிருந்தனர்.
இதனிடையே நேற்று மாலை கம்பம் வந்த எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் காரை சிக்னல் அருகே சாலையின் இருபறமும் நின்றிருந்த இஸ்லாமியர்கள் வழிமறித்தனர். அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தற்காக ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கருப்புக் கொடிக் காட்டினர்.
எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய இஸ்லாமியர்கள் அப்போது அங்கிருந்த காவல் துறையினர் கருப்புக் கொடி காண்பித்த இஸ்லாமியர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் இது தொடர்பாக 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.இதனிடையே ரவிந்திரநாத் குமாருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட சம்பவம் குறித்த செய்தி தேனி மாவட்டம் முழுவதிலும் தீயாகப் பரவியது.
இதைத் தொடர்ந்து பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கூடலூர் என பல்வேறு இடங்களிலும் ஓபிஎஸ், ஓபிஆரின் ஆதரவாளர்கள், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோர் ஆங்காங்கே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி கம்பம், பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேனி மாவட்டத்தில பெரும்பாலான பகுதிகள் பதற்றமாகக் காணப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:திமுக கூட்டணியில் காங்கிரஸ் உரிய இடங்களை பெறும் - அழகிரி