தேனி: கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழும் இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14,707 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாக இருபோக சாகுபடி பெறுகின்றன.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி இரண்டாவது வாரத்தில் பெய்து வந்த தொடர் மழையால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கியது. இதன் காரணமாக 71அடி உயரம் கொண்ட வைகை கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதன் முழுக்கொள்ளளவை நெருங்கியது. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமும் 132அடி வரை உயர்ந்தது.
இதனிடையே பெரியாறு - வைகை பாசன பங்கீட்டு பகுதிகளுக்கான தண்ணீர் சென்றடைந்ததால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவைகை, கொட்டக்குடி, சுருளியாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்தும் நீர் வரத்து அதிகரித்தே காணப்பட்டது.