தேனி:தென்கரை காவல்துறையினர் மிரட்டுவதாகக் கூறி வடகரை அம்பேத்கர் சிலை முன்பு, தற்கொலைக்கு முயற்சி செய்த தாய் மற்றும் மகளை வடகரை காவல் துறையினர் காப்பாற்றி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி துளசி (35). இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர்களது வீட்டிற்கு முன்பு, மின்சார வயர் தாழ்வாகச் செல்வதால், அருகில் உள்ள மரத்தின் மீது உரசி அவ்வப்போது மின் துண்டிப்பு ஏற்படுகிறது என மின்வாரிய அலுவலகத்தில் சண்முகநாதன் மற்றும் அவரது மனைவி துளசி ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்களான லூக்காஸ் மற்றும் குமார் ஆகிய இருவரும், மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தது தொடர்பாக, சண்முகநாதன் என்பவரை தாக்கியுள்ளனர். இதில், காயம் அடைந்த சண்முகநாதன், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சண்முகநாதனின் மனைவி, லூக்காஸ் மற்றும் குமார் ஆகியோர் மீது தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல், லூக்காஸ் மற்றும் குமார் ஆகிய இருவரும், சண்முகநாதன் மற்றும் அவரது மனைவி தங்களை தாக்கியதாகவும், அப்போது தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, தென்கரை காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.