தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், வைகை அணை அருகே உள்ள தனியார் ஆலைக்கு கரும்பு வெட்டும் பணிக்காக சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத் தொழிலாளிகள் அழைத்து வரப்பட்டனர். குறைந்த கூலியில் பணிபுரிந்த இவர்களால், கரோனா ஊரடங்கைச் சமாளிக்க முடியவில்லை. சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் இவர்களின் குழுவிலுள்ள 80 பேர் குன்னூர் செங்குளம் கண்மாய் அருகே கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர்.
தற்போது, வெளிமாநிலத் தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் சூழலில், தங்களையும் விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், இன்று ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகரன் ஆகியோர் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமுகமான பேச்சுவார்த்தையா?
மதுரையிலிருந்து ரயில் மூலமாக மகாராஷ்டிரா செல்வதற்கு, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால், அதனை ஏற்காத மகாராஷ்டிராவினர், தற்போதே தங்கள் பகுதிக்கு நடைபயணமாகச் செல்வதாகக் கூறி, அங்கிருந்து கிளம்பினர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல், வருவாய் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.