தேனிஅருகே சரத்துப்பட்டியைச்சேர்ந்தவர் ஜெயபால் (54), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தங்கமலை(48). ஜெயபால் தனது மனைவிக்குச்சொந்தமாக சங்ககோணாம்பட்டியில் இருந்த 2 சென்ட் நிலத்தை தேனியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தார்.
நேற்று அந்த நிலத்தை அளவீடு செய்து கற்கள் ஊன்றுவதற்காக ஜெயபால் மற்றும் சிலர் சங்ககோணாம்பட்டிக்கு வந்தனர். அப்போது தங்கமலையின் தம்பி ஜெயராம், தனது மனைவி முத்துபிரியாவுடன் அங்கு வந்தார். தனது அக்காவின் நிலத்தில் தனக்கும் பங்கு உள்ளதாகக்கூறி அவரும், அவருடைய மனைவியும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஜெயராம் தனது அக்கா கணவர் ஜெயபாலின் முகத்தில் மஞ்சள் பொடியைத்தூவினார். அவர் சுதாரிப்பதற்குள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவருடைய மார்புப்பகுதியில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.