தேனியில் குறவர் இன மக்கள் அரசு அடையாள அட்டைகள் புறக்கணிப்பு போராட்டம் தேனி: அம்மாபட்டியில் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில், 110 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அக்குடியிருப்பு வீடுகளில் தங்களுக்கான வீடுகளை ஒதுக்க வேண்டும் எனக் குறவர் பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தனர்.
பின்னர் இது குறித்து ஆலோசிக்கப்பட்டு, குறவர் பழங்குடியின மக்களுக்கு 55 வீடுகளும், நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு 55 வீடுகளும் என ஒதுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு மட்டும் தான் வீடு தரப்படுவதாக, குறவர் பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே, குறவர் பழங்குடியின மக்கள், தங்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்ற அரசு அடையாள அட்டைகளை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலையில் வீசி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்.. வேலூர் விவசாயிகள் வேதனை!
அப்போது, போராட்டக் களத்தில் இருந்த பெண்கள் கூறும் போது, "அம்மாபட்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை வழங்குவதாகக் கூறி, அதிகாரிகள் எங்கள் அரசு அடையாளங்களின் நகல்களைப் பெற்றுச் சென்றனர். ஆனால், தற்போது வீடு எங்களுக்கு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும், நரிக்குறவர் இன மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளிக்க முயன்றும், அவர்களைச் சந்திக்க முடியவில்லை. எனவே, எங்களுடைய ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகம் முன்பு குறவர் பழங்குடியின மக்களைச் சார்ந்த சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:தலைமை செயலகம் முன் ஆர்ப்பாட்டம்.. ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம் அறிவிப்பு!