தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரங்கணி தீ விபத்து - ஒரு நீங்காத சு’வடு’ - kurangani death

நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியான தினம் இன்று. இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தேனி மாவட்ட மக்களிடையே அதன் தாக்கம் நீங்கியதா என்பது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு.....

kurangani-fire-accident-2nd-anniversary
kurangani-fire-accident-2nd-anniversary

By

Published : Mar 11, 2020, 11:10 PM IST

Updated : Mar 12, 2020, 11:29 PM IST

குரங்கணி என்ற இடத்தை கடந்த 2018 மார்ச் 11ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில்! ஏன் தமிழகத்திலேயே யாருக்கும் பரவலாக தெரியாது. ஆம், தேனி மாவட்டம் போடியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது இந்த மலை கிராமம். பார்ப்பதற்கு பசுமைப்போர்வை போர்த்திய மலை முகடுகள், அருவிகள், ஆறுகள் என காண்பவர் கண்களுக்கு ரம்மியமாக காட்சியளிக்கும் இடங்கள் இங்கு ஏராளம்.

தமிழக-கேரள எல்லையின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள இப்பகுதிக்கு கடந்த சில வருடங்களாக மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி ஈரோடு, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 39 நபர்கள் 2 குழுக்களாக குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு மலையேற்றமாக சென்றனர்.

இரவில் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் மார்ச் 11ஆம் தேதி அதே வழியாக குரங்கணியை நோக்கி மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஒத்தமரம் எனும் பகுதியில் யாரும் எதிர்பாராத நேரம் காட்டுத்தீ எரிந்து கொண்டிருந்தது. தீயின் ஆபத்தை உணராமல் மலையேற்றம் சென்றவர்கள் அதை ஒரு பொருட்டாக எண்ணாது கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.

எதிர்பாராத நேரத்தில் அவர்களை காட்டுத்தீ முழுவதுமாக சூழ்ந்தது. தீயிலிருந்து தப்பிப்பதற்கு ஒவ்வொருவராக சிதறி ஓடி பள்ளங்கள், பாறை இடுக்குகள் என ஆபத்தில் சிக்கினர். கோடைகாலம் என்பதால் மலைமேட்டில் அதிகம் காய்ந்திருந்த போதைப்புற்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பற்றி எரிந்ததில் அனைவரும் தீயில் சிக்கினர். இதில் 11 நபர்கள் மட்டும் சிறு காயங்களுடன் தப்பினர்.

பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் உடலில் 50 முதல் 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சை அளித்தபோது, சிகிச்சை பலனின்றி மொத்தம் 23 நபர்கள் பலியாகினர். இந்த சம்பவம் தேனி மாவட்ட மக்களை மட்டுமல்ல, நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் குரங்கணி, போடி, தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு, காவல்துறையினர், பேரிடர் மீட்புக் குழு மற்றும் மருத்துவக் குழு ஆகியவை இரவோடு இரவாக உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மீட்புப் பணியில் தேனி மாவட்ட மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. காயமடைந்தவர்களை தங்களது வீட்டுப் பிள்ளைகள் போல எண்ணி தண்ணீர், உடை,போர்வை உள்ளிட்டவைகளை வழங்கி மீட்பதற்கு உதவி செய்தனர். தீக்காயம் அடைந்தவர்களை சாலை வசதி இல்லாத மலைப்பகுதியில் இருந்து தூக்கி வருவதற்கு பேருதவி புரிந்தனர். மீட்புப் பணியின் போது காயங்களுடன் கிடந்த பெண்கள் உதவி வேண்டும் என்று கண்ணீருடன் கதறியதை நினைவு கூறுகிறார் 108 ஆம்புலன்ஸ் பணியாளர் ஜெகதீஷ். காட்டுத்தீயில் சிக்கி இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் பட்ட வேதனை அனைத்தையும் நேரடியாக பார்த்த இவர், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11ஆம் தேதியை தனது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நாளாகவே கருதுகிறார்.

இந்த துயர சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், அந்த மலை முகடுகளை பார்த்தாலே தீயில் இறந்தவர்களின் கதறல் சத்தமும், உறவினர்களின் அழுகையும்தான் நினைவில் வருகிறது. எங்கோ பிறந்து, எங்கள் ஊருக்கு வந்த மலையேற்றத்தில் சிக்கி அவர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்கிறார் மீட்புப் பணியில் ஈடுபட்ட ரெட்கிராஸ் உறுப்பினர் சிதம்பரம்.

குரங்கணி தீ விபத்து - ஒரு நீங்காத சு’வடு’

இந்த தீ விபத்து குறித்து தமிழக அரசு அமைத்த விசாரணைக் கமிஷன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் தீ விபத்து எதனால் ஏற்பட்டது, என்ன காரணம் என்று இதுவரை வெளியிடப்படவில்லை. கோடை காலத்தில் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவதால் தற்காலிகமாக மலையேற்றத்திற்கு தமிழக வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், சூரியநெல்லி எனும் பகுதியில் இருந்து கொழுக்குமலைக்கு கேரள வனத்துறை அனுமதியோடு ஜீப் ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றனர். தமிழக வனத்துறைக்கு சொந்தமான சிங்கப்பாறை எனும் இடத்தில் ஆபத்தை உணராமல் சுற்றுலா மேற்கொள்வதால், மீண்டும் ஒரு குரங்கரணி சம்பவம் உண்டாகும். எனவே தமிழக அரசு, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அதனை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் அன்பு வடிவேல்.

Last Updated : Mar 12, 2020, 11:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details