தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அப்பகுதியில் விழுகின்ற தண்ணீர் குளிர்ச்சியாகவும், மூலிகைத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது.
இதனால் தேனி மாவட்டமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு கஜா புயலின்போது அருவியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினால் சுற்றுலாப் பயணிகள் நின்று குளிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள், கான்கிரீட் சிமெண்ட் தளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து, அவற்றை தற்காலிகமாக வனத் துறையினர் சீர் செய்தனர். அதனைத் தொடர்ந்து பெய்த பருவமழையினால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சேதமடைந்த பகுதிகள் மேலும் சேதமடையத் தொடங்கின.
கும்பக்கரை அருவி செப்பனிடும் பணி தீவிரம் அதனை சரிசெய்ய சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, சேதமடைந்த பகுதிகளை மேடாக்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. செப்பனிடும் பணிகள் முடிவடைந்ததும் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத் துறையினர் தெரிவித்தனர்.