தேனி: பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிபட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது, கெண்டிக்காரன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் குழந்தைகளின் படிப்பிற்கும், மருத்துவத் தேவைக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமத்திற்குச் செல்லும் நிலை தற்போது வரை நிலவி வருகிறது.
இந்த நிலையில், கெண்டிக்காரன்பட்டி கிராமத்திற்கு முன்பு கண்மாயில் இருந்து வரும் ஓடை நீர் செல்வதால், அதனைக் கடந்துதான் கிராமத்திற்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. இதனால் சிறு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
மழை பெய்ததால், மழைக் காலங்களில் தண்ணீர் அதிகரித்து, அப்பகுதியினர் கிராமத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும் எனக் கூறும் அப்பகுதி மக்கள், நீர் ஓடையைக் கடக்க பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதனை ஏற்று ஊராட்சி நிர்வாகம், கடந்த ஆண்டு பாலம் கட்டும் பணியைத் தொடங்கி உள்ளது. மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பாலம் கட்டி முடித்ததாகக் கூறி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கு திட்ட மதிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.