கரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக அனைத்து மாவட்ட, மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த பரிசோதனையில் கரோனா அறிகுறி இருப்பவர்கள் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படாதவர்களும், வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களும் 14நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களில் 75 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களில் ஆண்டிபட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.