தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நியாயவிலைக் கடையில் பொருட்கள் வழங்காததால் பெண்கள் போராட்டம்!

தேனி: கம்பத்தில் நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் பெண்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

பெண்கள் போராட்டம்

By

Published : Jul 23, 2019, 11:33 AM IST

Updated : Jul 23, 2019, 2:25 PM IST

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கம்பம் மெட்டுக்காலனியில் நான்காம் எண் நியாயவிலைக் கடை செயல்பட்டுவருகின்றது. 1430 குடும்ப அட்டைதாரர்களைக் கொண்ட இந்த நியாயவிலைக் கடையில் முறையாக பொருட்கள் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பாமாயில் எண்ணெயும் விநியோகம் செய்யப்படவில்லை, புழுங்கல் அரிசிக்கு பதிலாக, பச்சரிசி மட்டுமே வழங்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் பலமுறை கடை விற்பனையாளர்களிடம் விவரம் கேட்டும் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் மாதம் மாதம் நியாயவிலைக் கடை பொருட்கள் வாங்காத பொதுமக்களுக்கு பொருட்கள் வாங்கியதாகவும் குடும்ப அட்டைதாரர்களின் அலைபேசிக்கு குறுந்தகவலும் வந்துள்ளது.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடையை முற்றுகையிட்டனர். பின்னர் திடீரென கம்பமெட்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கம்பம் வடக்கு காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அனைத்து நியாயவிலை அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் கம்பம் மெட்டு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நியாயவிலைக் கடையில் பொருட்கள் வழங்காததால் பெண்கள் போராட்டம்!
Last Updated : Jul 23, 2019, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details