தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆண்டி(37), சிவராமன்(40). இருவரும் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் காவலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கோயில் அருகே உள்ள வனப்பகுதியில் இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது மதுரை – போடி அகல ரயில் பாதைக்காக ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வெடி வைத்து தகர்க்கும் பணி நடைபெற்றுள்ளது.
இந்த வெடி, வெடித்து மலையில் இருந்த கற்கள் சிதறி காவலாளிகள் ஆண்டி, சிவராமன் மீது விழுந்துள்ளது. படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயமடைந்த ஆண்டியை, மதுரை இராசாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த ஆண்டி இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஆண்டிபட்டி காவல் துறையினர், முன்னறிவிப்பின்றி பாறைகளுக்கு வெடி வைத்ததாக திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரரான எர்த் மூவின் உரிமையாளர், வெடி வைத்த சேலம் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பன், பொன்னரசன், வெடிபொருள் விநியோகம் செய்த தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஏசியில் மின் கசிவு - தீ பற்றி எரிந்த ஏடிஎம் மையம்!