வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள், தென்னந்தோப்புகள், தேயிலை தோட்டங்கள் என எங்கு பார்த்தாலும் செழிப்பாக இருக்கும் பூமிதான் தேனி மாவட்டம். இந்த செழிப்பினாலும், மக்கள் சலிக்காமல் உழைப்பதாலும் இம்மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. ஆனால் அண்மைக்காலமாகவே இம்மாவட்ட விவசாயிகள் ஏமாற்றத்தை மட்டுமே அறுவடை செய்து வருகின்றனர். விளைச்சல் அதிகமிருந்தும் தகுந்த விலை கிடைக்காத காரணத்தால் விவசாயம் சார்ந்த வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.
கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி, அம்மச்சியாபுரம், கோட்டூர், உப்பார்பட்டி, நாகலாபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பின் பக்கம் திரும்பியுள்ளனர். மாதந்தோறும் நிரந்தர வருமானம் கிடைப்பதால் பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டின் இறுதியில் பட்டுப்புழுக்களை ஊசி ஈக்கள் எனும் ஒரு வகை ஈக்கள் தாக்கியதால் பட்டு உற்பத்தி கடுமையாக பாதித்தது.
இதனையடுத்து மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை வழங்கிய தைமஸ் எனும் ஒட்டுண்ணியை பயன்படுத்தியதால் ஊசி ஈக்களின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் தற்போது பட்டுப்புழுக்களுக்கு உணவாகக் கொடுக்கக் கூடிய மல்பெரி செடியில் குருத்துப் புழுத் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் குளிச்சியான சூழலில் இந்தப் புழுக்களின் தாக்கம் இருக்கும். ஆனால் வெயில் அதிகமாக அடிக்கக்கூடிய இந்த சீசனிலும், குருத்துப்புழுக்களின் தாக்குதல் இருக்கிறது.