மருத்துவத்துறையில் மருத்துவர்கள் அல்லாதவர்களை பணியில் அமர்த்தும் மத்திய அரசின் முடிவை ரத்து செய்யவும்,
மருத்துவப் படிப்பில் நெக்ஸ்ட் தகுதி தேர்வை கைவிட வலியுறுத்தியும், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்த பயிற்சி மருத்துவர்கள்!
தேனி: மத்திய அரசுக்கு எதிராக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு, பயிற்சி மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எட்டாவது நாளான நேற்றைய போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் இணைந்து போராடினர்.
மருத்துவமனையின் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவின் நுழைவாயிலில் அமர்ந்து மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு போராடினர். இதனால் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் சிகிச்சைப் பெற முடியாமல் திரும்பி சென்றனர். அவரச சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டது.