தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திக்கு தேனியில் ஒலித்த ஆதரவு குரல்! - சுவரொட்டி

தேனி: மத்திய அரசின் மும்மொழி கல்வித்திட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கிவரும் நிலையில், இந்தி மொழி கற்பிப்பதற்கு ஆதரவாக தேனியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

tni

By

Published : Jun 5, 2019, 9:26 AM IST

Updated : Jun 7, 2019, 11:31 AM IST

மத்திய அரசு அண்மையில் அறிவித்த மும்மொழி கல்வித் திட்டத்தின் வரைவறிக்கையின்படி இந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது பாடமாக இந்தி படிப்பது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மீண்டும் 1965ஆம் ஆண்டு மொழிப்போர் போல மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இந்தி மொழி படித்தால் நல்லது என்று தேனியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'தமிழக மக்களே சிந்திப்பீர்! இந்தியா முழுவதும் வியாபாரம் மற்றும் வேலை பார்க்க இந்தி படிப்பது நல்லது' என்று அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் பெயர்கள் குறிப்பிட்டுள்ள ஓ.கே. திருப்பதி, ஆர். சடையாண்டி ஆகியோரை சந்தித்து நாம் பேசினோம்.

வியாபாரி திருப்பதியின் கருத்து:

சுவரொட்டி ஒட்டிய வியாபாரி ஓ.கே.திருப்பதி கூறுகையில், தான் ஒரு பருப்பு வியாபாரி எனவும், கடலை, பாசி, துவரம் உள்ளிட்ட 10 வகையான பருப்புகளின் சந்தை வட மாநிலங்களில்தான் உள்ளதாகவும் தெரிவித்தார். வியாபாரம் நிமித்தமாக மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கையில், இந்தி மொழி தெரியாதததால் தனக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகவும், மேலும் தொழில் ரீதியாக வியாபாரிகளிடம் ஒரு உறவுமுறை கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. படித்த தான், 1965இல் தமிழ்நாட்டில் தீவிரமடைந்த இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தின்போது எதற்காக போராடுகிறோம் என தெரிந்து கொள்ளாமலே இந்தியை எதிர்த்தாக குறிப்பிட்டார்.

மேலும் பள்ளி செல்லும் வயதில் விடுமுறை விடப்படும் என்பதற்காகவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால் தொழிலுக்கு வந்தபின்தான், வியாபார ரீதியாக வெளிமாநிலங்களுக்கு செல்கையில் உண்டாகும் சிரமத்தை உணர்ந்ததாக தான் அனுபவித்த பிரச்னையை நம்மிடம் பகிர்ந்தார்.

இந்தி கற்றுக் கொள்வதால் தமிழ்மொழி நம்மிடமிருந்து அழிவதில்லை என்ற அவர், ஒரு மொழியை கற்றுக் கொள்வதால் பணி மற்றும் வியாபார ரீதியாக நமக்கு நன்மையே ஏற்படும் என்று தெரிவித்தார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த சுவரொட்டிகளை தான் ஒட்டியதாக அவர் கூறினார். இதனால் தனக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுவதாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.

ஒப்பந்ததாரர் சடையாண்டியின் கருத்து:

இந்த சுவரொட்டியை ஒட்டிய மற்றொருவரான சடையாண்டி என்பவர் கூறுகையில், இந்தி மொழியை வைத்து அரசியல்வாதிகள்தான் அரசியல் செய்கின்றனர் எனவும், எந்த ஒரு அரசியல்வாதியும் தனது வீட்டில் உள்ள குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் தனியார் பள்ளியில், அதுவும் இந்தி மொழி கற்க கூடிய பள்ளியில்தான் படிக்க வைப்பதாக கூறிய அவர், இந்தி மொழியை வைத்து அரசியல் செய்யும் இவர்கள், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தையும் கெடுக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

அத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களும் இந்தி மொழியை கற்றால்தான், அவர்களும் வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிவதற்கு எளிமையாக இருக்கும் எனவும், இந்தி கற்றுக்கொண்டால் நல்லது என்ற நோக்கத்திலேயே நாங்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

சுவரொட்டி ஒட்டியவர்களின் பேட்டி
Last Updated : Jun 7, 2019, 11:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details