போடிமெட்டு மலைச்சாலையில் மண்சரிவு தேனி:வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்ட கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில் நேற்று முதல் தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில கடந்த 18 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
இந்த கன மழை காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் போடி மெட்டு மலைச்சாலையில் ஒன்பதாவது மற்றும் பதினோராவது கொண்டை ஊசி வளைவுகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எட்டாவது கொண்டை ஊசி வளைவு அருகில் உள்ள புலியூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாகர்கோவில் - நெல்லை மார்கத்தில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!
இதனால் நேற்று இரவு பத்து மணி முதல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக குரங்கணி காவல் துறையினர் அறிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் போடி மெட்டு மலைச் சாலையில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்திருக்கும் நிலையில் இரவு முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன. இந்நிலையில் மண்சரிவு அகற்றப்பட்ட பிறகு வாகன போக்குவரத்து தொடங்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனங்கள் அனைத்தும் காவல்துறை அனுமதிக்காக காத்துள்ளன.
இந்த போக்குவரத்து பாதிப்பால் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் எலத் தோட்டங்களுக்கு செல்லும் பணியாளர்கள் இன்று வேலைக்கு செல்லவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் கனமழை: திருநெல்வேலி - தென்காசி இடையே போக்குவரத்து துண்டிப்பு!