தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 29, 2020, 7:03 AM IST

ETV Bharat / state

இளம் பெண்ணின் கை முறிவு: நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்த நகராட்சி நிர்வாகம்

தேனி: கூடலூரில் இளம்பெண் பணியாளரின் கை முறிந்ததற்கு உரிய நிவாரணம் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை
முற்றுகை

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி சார்பில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டுவருகின்றது. தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படும் இந்தத் தொழிற்சாலையில் கூடலுர் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ரீனாதேவி (19) வேலை செய்து வந்தார்.

செப்டம்பர் 16ஆம் தேதி ரீனாதேவி பணியில் இருந்தபோது அவரது இடது கை இயந்திரத்தில் சிக்கி கை முறிவு ஏற்பட்டது. உடன் வேலை செய்தவர்கள், ரீனாதேவியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இந்நிலையில், பணியின்போது பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு நகராட்சி நிர்வாகமோ, ஒப்பந்ததாரரோ இதுவரையில் எந்தவொரு நிவாரணமும் வழங்கவில்லை எனக்கூறி கூடலூர் நகராட்சி அலுவலகத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

நகராட்சி அலுவலக நுழைவுவாயிலில் அமர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் தெற்கு காவல் துறையினர், ரீனாதேவியின் உறவினர்கள், ஒப்பந்ததாரர், நகராட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ உதவியும், 3 மாதத்திற்கான சம்பளமும் நிவாரணமாக பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதால் முற்றுகையை கைவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details