96 பட பாணியில் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் சண்முகசுந்தரபுரம் அரசு தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சண்முகசுந்தரபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 1988ஆம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தற்போது பல பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வசித்து வருகின்றனர்.
இவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, தங்களது குடும்பத்தினருடன் வைகை அணையில் சந்தித்துக் கொண்டனர். இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து, அதன் மூலம் முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பள்ளி குழந்தைகளாகச் சந்தித்து கல்வி பயின்ற மாணவர்கள், தற்போது தங்களது பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சந்தித்துக் கொண்டது, அவர்களுக்கு மகிழ்ச்சியான வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து ஜோதி என்பவர் கூறுகையில், “1987 - 1988ஆம் ஆண்டு பின்தங்கிய நிலையில் இருந்த ஆண்டிபட்டியின் அருகே செயல்பட்ட சண்முகசுந்தரபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்கள், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
முன்னாள் மாணவர்கள் நாங்கள் சந்தித்துக் கொண்டது, நினைத்து பார்க்க முடியாத மகிழ்ச்சியான தினமாக அமைந்தது. இந்த சந்திப்பு நிகழ்ச்சி, எங்களது பலநாள் கனவு, அது தற்போது நனவாகியுள்ளது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் முடிவில், முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் படித்த அரசு தொடக்கப் பள்ளிக்கும், அதன் மாணவர்களின் கல்விக்கும் வளர்ச்சிப் பணிகள் செய்ய வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தனர்
இதையும் படிங்க:ஊழல் வழக்கில் சிக்கிய பாஜக அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்? - கே.பாலகிருஷ்ணன்