பெரியகுளத்தில் அரசு உதவி பெறும் பள்ளியை தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி தேனி:தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் நாடார் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு இப்பள்ளியானது அந்தோணியார் நடுநிலைப்பள்ளி என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது. அதன் உரிமையாளராக ஜான் பிரிட்டோ செல்வராஜ் என்பவர் இருந்துள்ளார்.
இதனையடுத்து, இப்பள்ளியைப் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், தனது நண்பர்களுடன் கல்வித் தந்தை காமராஜர் அறக்கட்டளை என்ற பெயரில், தமிழ்நாடு சங்க பதிவு சட்டப்படி, ஒரு தன்னார்வல சங்கத்தைப் பதிவு செய்து, சுமார் ரூ.2,57,000க்கு சங்கத்தின் பெயரில் கிரயம் செய்து, ஜான் பிரிட்டோ செல்வராஜிடமிருந்து பள்ளி கட்டிடத்தைப் பெற்றுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, அந்தோனியார் நடுநிலைப்பள்ளி என்ற பெயரை, நாடார் நடுநிலைப் பள்ளி என்று பெயர் மாற்றம் செய்து கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாகப் பள்ளி செயல்பட்டு வந்துள்ளது. பள்ளியின் தாளாளரான பாலகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வந்ததால், சங்க உறுப்பினர்களில் ஒருவரான கண்ணன் என்பவரிடம், சங்கத்தின் நிலைப்பாடு குறித்தும், பள்ளிகளின் செயல்பாடு குறித்தும் கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். இதனால், அவரின் மகன் கோகுலகிருஷ்ணன், காமராஜர் அறநிலையத்தைப் பற்றியும் பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும் சங்க செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், சங்க செயலாளர்கள் இவரைச் சந்திக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கோகுலகிருஷ்ணன், கல்வித் தந்தை காமராஜர் அறக்கட்டளை மற்றும் நாடார் நடுநிலைப் பள்ளியின் வில்லங்க ஆவணச் சான்றை எடுத்துப் பார்க்கையில், பள்ளியை, சங்கத்தின் செயலாளராகிய கண்ணன், அவர்களது மனைவி ஜெய ரூபினிக்கு 2012ஆம் ஆண்டு ரூ. 20,85,000க்கு மோசடி செய்து கிரயம் செய்து கொடுத்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கோகுலகிருஷ்ணன் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கல்வித்துறை உயர் அதிகாரிகளைக் கொண்டு ஆவணங்களைச் சரிபார்த்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. உத்தரவின் படி, அறக்கட்டளையின் தற்போதைய தலைவர், நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அழைத்து கல்வித்துறை இணை இயக்குநர் பொன்னையா தலைமையில், தேனி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
இது குறித்து கோகுலகிருஷ்ணன் கூறுகையில், “ தனது தந்தை மற்றும் சில நிர்வாகிகள் சேர்ந்து காமராஜர் அறக்கட்டளை என்ற பெயரில் நாடார் நடுநிலைப்பள்ளி உருவாக்கிச் செயல்படுத்தி வந்துள்ளனர். தனது தந்தை இறந்த பிறகு, தந்தையின் பெயரை நீக்கிவிட்டு, தங்களுக்குத் தகவல் தெரிவிக்காமல், கண்ணன் என்பவர் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு, அவரின் மனைவியின் பெயருக்குப் பள்ளி நிர்வாக சொத்துக்களைப் பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
எனவே, காமராஜ் அறக்கட்டளையின் அனைத்து ஆவணங்களையும் கல்வித்துறை இணை இயக்குநரிடம் வழங்கி உரிய விசாரணை நடத்தப்பட்டு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியைப் பழைய இயக்குநர்களைக் கொண்டு நடத்த வேண்டும். மேலும், மோசடி செய்த கண்ணன் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மிக்ஜாம் புயல்: ராணிப்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!