தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55). இவரது மனைவியான மீனாவுக்கு (45) பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த யோகபாலன் (19), தங்கப்பாண்டி ஆகிய இரண்டு இளைஞர்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களது தொடர்பை அறிந்த முருகன், தனது மனைவி உள்பட மூவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு இளைஞர்களும், முருகனை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த சில நாள்களாக பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு (பிப்.05) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகனை, பின்தொடர்ந்த யோகபாலன், தங்கப்பாண்டி, அவரது நண்பர்கள் சின்னமணி (19), ரத்தினமுத்து (19), சூர்யா (21) ஆகியோரது உதவியுடன் கத்தியால் கழுத்தில் குத்தி உள்ளனர். படுகாயமடைந்த முருகன் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தென்கரை காவல்துறையினர், யோகபாலன், சின்னமணி, ரத்தினமுத்து, சூர்யா ஆகிய நான்கு பேரையும் நேற்று (பிப்.06) கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கப்பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் கோயில் பூசாரி கொலை