தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் விவசாயி ஜெயக்கொடி. இவர் 2017ஆம் ஆண்டு தேனியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி ஒன்றில் தனது நிலத்தின் பத்திரத்தை அடமானமாக வைத்து விவசாய கடன் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.
இதனையடுத்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் வங்கி கடனுக்கான தவணை தொகையை முறையாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட்து. இதனிடையே வங்கியின் சார்பில் பலமுறை ஜெயக்கொடியிடம் மாத தவணை தொகையை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இறுதியாக ஜெயக்கொடியிடம் வாங்கிய கடனின் முழுத்தொகையையும் வட்டியோடு சேர்த்து உடனடியாக கட்ட வேண்டும் என வங்கி ஊழியர்கள் அவரின் வீட்டின் கதவில் நோட்டீஸ் ஓட்டி சென்றும், விரைவில் வங்கி கடனை செலுத்த வேண்டும் என்று இல்லையென்றால் நிலம் ஜப்தி செய்யப்படும் என்றும் கூறி சென்றனர்.
இதனால் மனமுடைந்த ஜெயக்கொடி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்து கிடந்தார். வெளியில் சென்று வீடு திரும்பிய அவரது மனைவி மயங்கி கிடந்த ஜெயக்கொடியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜெயக்கொடியின் மகன் மலைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.