முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் நாச்சியார் (95) கடந்த மாதம் உடல் நலக் குறைவு காரணமாக தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இதையடுத்து மீண்டும் பிப். 22ஆம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் அவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு 9:30 மணி அளவில் அவர் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி அவரை பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் நேற்றிரவு 10.02 மணி அளவில் மரணம் அடைந்தார்.
இதையறிந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்து, திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பெரியகுளம் சென்று, தாயாரின் உடலை பார்த்து அவரது கால்களை பிடித்து கதறி அழுதார். இன்று காலை முதல் ஓபிஎஸ்-இன் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.