தேனி: விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்ட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 51), நேற்று இரவு வண்ணத்திப்பாறை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று இருக்கிறார். இந்நிலையில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனத்துறையினரை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறி, அவரை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து விவசாயி ஈஸ்வரனின் உறவினர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கியால் சுட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.