வனத்துறை துப்பாக்கி சூட்டில் விவசாயி இறந்த விவகாரம்.. கொட்டும் மழையிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.. தேனி: கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் நேற்று முன்தினம் (அக் 28) வண்ணாத்திப்பாறை பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். தோட்ட வேலைக்காகச் சென்ற அவர், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட கூடலூர் வனத்துறையினர், ஈஸ்வரனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் மேலும், ஈஸ்வரன் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்ததாகவும் இதனைக் கண்டித்த ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத்துறையினரைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் அதனால், ஈஸ்வரனைத் துப்பாக்கியால் சுட்டதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், நேற்றைய தினம் (அக் 29) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, துப்பாக்கியால் சுட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது உறவினர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டபோது, போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் கூறியதை அடுத்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த விவசாயி ஈஸ்வரனின் உடல், உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து உத்தம பாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராமநாதன், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உடற்கூராய்வு கூடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
ஆனால் வனத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள ஈஸ்வரனின் உறவினர்கள் நேற்று முழுவதும் போராட்டம் நடத்திய நிலையில், இன்று (அக் 30) காலை இரண்டாவது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த ஈஸ்வரனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈஸ்வரனின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் போலீசார் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் கொட்டும் மழையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சொத்துக்களை ஏமாற்றி பெற்றுக் கொண்டதாக காவல்துறை ஆய்வாளர் மீது மாமனார் பரபரப்பு புகார்!