தேனி:தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குட்பட்ட வன்னாத்திப்பாறை வனப்பகுதியில் 2023, அக்.28 ஆம் தேதி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடி வனத்துறையினரை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறி வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் விவசாயி ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
'ஈஸ்வரன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வனத்துறையினரை கண்டித்தும் துப்பாக்கிச் சூடு நடத்திய வன அலுவலர் உட்பட வனத்துறையினரை கைது செய்ய வேண்டும்' என கூறி இரண்டு நாட்களாக உறவினர்கள் தேனி ஆட்சியர் அலுவலகத்திலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், நீதிபதி விசாரணையில், சம்பந்தப்பட்டவர் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாக எம்எல்ஏ உறுதி அளித்தப் பின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.