தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் பயன்படுத்திய பாதைக்கு வனத்துறை தடை விதித்ததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்!

தேனி: கடமலைக்குண்டு மலைக்கிராம விவசாயிகள் பயன்படுத்தி வந்த பாதையை தடை செய்த வனத்துறையை கண்டித்து மேகலை வனச்சரக அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

By

Published : Jul 2, 2020, 9:13 PM IST

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள இந்திராநகர் குடியிருப்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் வசித்து வருகின்றனர். மேகமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள அப்பகுதியில் மொச்சை, முருங்கை, பீன்ஸ், வெண்டை, அவரை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பயிர்களை தேனி, மதுரை, உள்ளிட்ட இடங்களுக்கு சந்தைப்படுத்துவதற்காக மேகமலை வனப்பாதையை தான் கடந்த 60 ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், மேகமலை வன உயிரின சரணாலயமாக மாற்றப்பட்டதை தொடர்ந்து வனத்தை ஒட்டியுள்ள பாதையை விவசாயிகள் பயன்படுத்த வனத்துறை தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகம், மேகமலை வனக்காப்பாளர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டனர். இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் விளைபொருள்களை எடுத்துச் செல்வதற்கு மேகமலை வனக்கோட்டம் அனுமதியளித்தது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த வனப்பாதையை தடை செய்து வனத்துறையினர் முட்டுக்கட்டை போட்டனர்.
இதையறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்டக் குழு, அப்பகுதி விவசாயிகளுடன் இன்று (ஜூலை 2) மேகமலை வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விளை பொருள்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்காக காலம் காலமாக பயன்படுத்தி வந்த வனப்பாதையில் விவசாயிகள் தொடர்ந்து சென்று வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தகுந்த இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்தவாறு அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மேகமலை வனச்சரகர் சதீஷ்கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், வனப்பாதையை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details