தேனி: தேனி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படும் நாட்டு மாடுகளுக்கு வனத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிச்சீட்டு வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு அனுமதிச்சீட்டு வழங்குவதில் வனத் துறையினர் காலதமாதப்படுத்துவதாக மலை மாடு விவசாயிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், வனத் துறையைக் கண்டித்து அச்சங்கத்தினர் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், மலை மாடுகள் விவசாயிகள் சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் அழைத்தது.
அதனையேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலை மாடு மேய்க்கும் விவசாயிகள் குவிந்தனர். பேச்சுவார்த்தை கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தலைமையில் மலை மாடு மேய்க்கும் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளும், அரசுத் தரப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம், மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் துக்காராம் போஸ்லே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மலை மாடுகளுக்கு இலவசமாக அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாய சங்க நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த வனத் துறையினர், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவதால், அனுமதி வழங்க இயலாது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை இடத்தொடங்கினர்.