தேனி:அறுவடைக்குத் தயார் நிலையில் பொங்கல் கரும்புகள் உள்ளதை அடுத்து, இந்த ஆண்டு தமிழக அரசு கொள்முதல் செய்யும் கரும்பினை விலையேற்றம் செய்து கொள்முதல் செய்தால், கரும்பு பயிரிட்ட தங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள விவசாயிகள், அரசின் உத்தரவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, காமாட்சி அம்மன் கோயில், மஞ்சளாறு, சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு பயிரிடப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் பொங்கல் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளாமல் கைவிட்டுள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டு 10 கரும்புகள் உள்ள ஒரு கட்டின் விலை 320 முதல் 350 ரூபாய் வரை விலை போன நிலையில், இவ்வாண்டு உரம் விலை, வேலை ஆட்கள் கூலி உள்ளிட்ட சாகுபடி செலவு அதிகரித்துள்ளதால், 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பின் விலை 400 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் விவசாயிகள் வருவாய் ஈட்டமுடியும் எனத் தெரிவித்துள்ளனர்.