தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கண்டமனூர், கடமலைக்குண்டு, வெங்கடாசலபுரம், அழகாபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பருத்தி, அவரை, முருங்கை, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை இறவைப் பாசன மற்றும் மானாவாரியாக சாகுபடி செய்து வருகின்றனர். இந்தாண்டு கோடை துவங்குவதற்கு முன்பே முக்கிய நீர் நிலைகளில் நீர் இருப்பு சரியத் தொடங்கியது. எதிர்பார்த்த பருவமழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறையத் தொடங்கியது. இதனால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றத் தொடங்கியதால் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் காய்ந்து கருதத் தொடங்கின. இந்நிலையில் அறுவடை காலம் வரையில் பயிர்களை காப்பாற்றுவதற்கு, விவசாயிகள் தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கி சாகுபடியை தொடர்கின்றனர்.
'ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர்' - முருங்கை விவசாயிகள் வேதனை!
தேனி: மழை இல்லாததால் தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கி, ஒரு முருங்கை மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் எனும் அவல நிலைக்கு தேனி மாவட்ட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அழகாபுரியைச் சேர்ந்த விவசாயி அடைக்கன் கூறுகையில், மானாவாரி நிலத்தில் முருங்கை, பருத்தி ஆகியவைகள் பயிரிட்டுள்ளோம். 3 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் ஒன்றரை ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்கிறோம். அதற்கும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை மற்றும் பருவமழை பொய்த்ததால் விளை நிலங்கள் எல்லாம் தற்போது வறண்ட நிலங்களாக மாறி வருகின்றன. வறட்சியின் பிடியிலிருந்து தப்பிக்க தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கி சாகுபடி செய்கின்றோம்.
ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் என்று சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். முருங்கை சாகுபடியில், விதை, களை எடுத்தல், உரமிடுதல், மருந்து அடித்தல், வேலையாட்கள் கூலி என ஏக்கருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் வரை செலவாகின்றன. ஆனால், தற்போது அறுவடைக் காலம் வரை முருங்கை மரங்களுக்கு தண்ணீர் வாங்குகின்ற செலவு மட்டும் ரூ.10 ஆயிரம் வரும். மூலதன செலவுக்கு நிகராக தண்ணீர் செலவு உண்டாவது வேதனை அளிக்கிறது. இவ்வளவு செலவு செய்தும் விளைச்சல் இல்லாவிட்டால் மிகுந்த நஷ்டம் ஏற்படும். மழை பெய்தால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும், என்றார்.