தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவு நீரை பயன்படுத்தி சாகுபடி - விவசாயிகளின் அவல நிலை!

தேனி: மழைநீர் இல்லாததால் கழிவு நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, ஆண்டிப்பட்டி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

By

Published : Jul 27, 2019, 8:59 PM IST

கழிவு நீரை பயன்படுத்தி சாகுபடி - விவசாயிகளின் அவல நிலை!


தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பாலக்கோம்பை, வெங்கடாசலபுரம், ஜங்கால்பட்டி, நாகலாபுரம், ஸ்ரீரங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், மானாவாரி மற்றும் இறவை பாசனத்தின் மூலம் சாகுபடி நடைபெறுகிறது. பருத்தி, கடலை, வெண்டை, வெங்காயம், தக்காளி, கத்தரி உள்ளிட்ட பயிர்கள் இப்பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு கோடை மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், அப்பகுதி கடும் வறட்சியடைந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறையத் தொடங்கியதால், மானாவாரி பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டு நிலத்தை தரிசாக போட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு சிலர் நிலத்தை தரிசாக்க மனமில்லாமல் ஆழ்துளை கிணறுகள் அமைத்து சாகுபடி மேற்கொள்கின்றனர். இதற்கும் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் கழிவு நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கழிவு நீரை பயன்படுத்தி சாகுபடி - விவசாயிகளின் அவல நிலை!

தேனி மாவட்டம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. இவருக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு ஏக்கரில் மட்டுமே தற்போது விவசாயம் செய்து வருகிறார். இதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கழிவு நீரை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு சொந்தமான நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்து வருகிறேன். விதை, களை எடுத்தல், மருந்து அடித்தல், உரமிடுதல், ஆட்கள் கூலி என நடவு செய்த நாட்களிலிருந்து தற்போது வரை (40 நாட்கள்) ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் பராமரிப்பு செலவு உள்ளது. இந்நிலையில் போதிய மழை இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளேன். இதனால் வேறுவழியின்றி வடிகால் கழிவு நீரை பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பு மற்றும் கால்நடை கொட்டகைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேமித்து வைத்து அதனை குழாய்கள் மூலம் கம்ப்ரஸ் செய்து நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுகின்றேன். இதனால் விளைச்சல் சற்று குறைவாகவே உள்ளது. இருந்தபோதிலும் நிலத்தை தரிசாக விருப்பமில்லாமல், நடவு செய்த பயிர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தினால் இதுபோன்ற கழிவு நீரை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன்", என்றார்

மேலும், விளைச்சலுக்கேற்ப விலை கிடைக்காவிட்டால் மிகுந்த நஷ்டம் ஏற்படுவதாகவும், பருவம் தவறாமல் மழை பெய்தால் மட்டுமே விவசாயிகள் பிழைக்க முடியும் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details