தேனி மாவட்டம் போடி மேலத் தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் (36). இவர் தேனி கொண்டுராஜா பள்ளி அருகில் 'சன் மனநல மையம்' என்ற பெயரில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து வருவதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளுமாறு பெரியகுளம் சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமணனுக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற லட்சுமணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில், அப்பாஸ் என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக இணை இயக்குநர் அளித்த புகாரின்பேரில், தேனி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர் அப்பாஸை கைதுசெய்தனர்.
தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் போலி மருத்துவர் அப்பாஸ் 2018ஆம் ஆண்டு 18 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாய் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில்விட முயற்சித்த வழக்கில் தேனி நகர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.