பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
தேனி: முதல் போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர், பாசனத்தின் முக்கிய நீராதாரமாக இந்த் அணை திகழ்கிறது.
அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 71 அடி உயரம். தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த மாத இறுதியில் 60 அடியாக உயர்ந்ததையடுத்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட இருபோக நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக ஆகஸ்ட் 31ஆம் தேதி 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்ததாலும் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 63அடி வரை எட்டியது.
இந்நிலையில் வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக நிலங்களின் விவசாய தேவைக்காக கூடுதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து வைகை அணையிலிருந்து ஏற்கனவே திறக்கப்படும் தண்ணீரோடு சேர்த்து இன்று (செப்டம்பர் 28) முதல் கூடுதலாக வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன்படி மொத்தமாக கால்வாய் வழியாக வினாடிக்கு 1, 800 கனஅடியும், மதுரை, தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி பகுதி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடியும் சேர்த்து மொத்தமாக வினாடிக்கு 1, 872 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் உள்ள 98 ஆயிரத்து 764 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கரும், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கரும் என மொத்தமாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடையும்.
தண்ணீர் இருப்பை பொறுத்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும், விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும் என்றும் பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.