கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பொது மக்களுக்காக அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அரசு தற்போது வழங்கி வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் வந்து பொருட்கள் வாங்குவதால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் நான்கு சக்கர வாகனங்களில் ரேஷன் பொருள்களை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக வந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வரிசையாக நின்று ரேஷன் பொருள்களை வாங்கிச்சென்றனர். அதேபோன்று கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:வெள்ளை மாளிகை பின்பற்றும் வேறு நாட்டு தலைவர்கள் யார் தெரியுமா?