கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஏழை எளிய மக்கள், தின கூலிகள் என பலரும் வேலையிழந்து, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு உயிருள்ள பிராய்லர் கோழிகளை நிவாரணப் பொருளாக வழங்கி அப்பகுதி திமுகவினர் கவனம் ஈர்த்துள்ளனர்.
அம்மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையைச் சுற்றியுள்ள தோட்டங்களில் ஏராளாமான கூலித் தொழிலாளர்கள் வேலைசெய்துவரும் நிலையில், இவர்களுக்கு தேனி மாவட்ட திமுக தொழிலாளர் அமைப்பு சார்பில், பிராய்லர் கோழிகள் வழங்கப்பட்டன. ஒருவருக்கு இரண்டு கிலோ எடையுடைய பிராய்லர் கோழி வீதம் சுமார் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கோழிகள் வழங்கப்பட்டன.
திமுக விவசாய அணி மாநில துணைத் தலைவர் மூக்கையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி திமுகவினர் கலந்து கொண்டு கோழிகளை நிவாரணமாக வழங்க, தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க :வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு