தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமி புரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கழிஞர்கள் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், கடந்த 3ஆம் தேதி மகாராஜன், சின்னச்சாமி ஆகியோருக்கிடையேயான நில வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதில், மகாராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புகழேந்தி, முருகன் என்பவரை குறுக்கு விசாரணை செய்த போது நீதிபதி முன் வழக்கறிஞரை முருகன் மிரட்டியுள்ளார். இதனை நீதிபதி அவ்விடத்தில் கண்டித்துள்ளார்.
மேலும் நீதிமன்ற வளாகத்தில் எதிர் மனுதாரரான சின்னச்சாமியும், வழக்கறிஞர் புகழேந்தியை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீதிமன்றத்தில் நீதிபதி முன் வழக்கறிஞரை மிரட்டிய இச்செயலைக் கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்தால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.