தேனி: பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், D.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது.
இப்பகுதிகளில் பூவன், நாளிப்பூ, ரஸ்தாலி, செவ்வாழை உள்ளிட்ட ரகங்கள் விளைவிக்கப்பட்டு, வெளிமாநில மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது குள்ளபுரம் பகுதியில் விவசாயிகள் நடவு செய்துள்ள வாழை, தார் விட்டு 25 சதவீத விளைச்சலுடன் உள்ளது.
இந்நிலையில், இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழையில் இலைக்கருகல் என்று அழைக்கப்படும் காஞ்சார நோய் தாக்குதல் தொடங்கியுள்ளது. இதில் வாழை இலைகள் காய்ந்து வருவதோடு, வாழை பிஞ்சுகள் மற்றும் 25 சதவீத விளைச்சல் உடைய வாழைக்காய்கள் உரிய விளைச்சல் அடையாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்த வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.