பூதிப்புரம் :தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 40). கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆதிபராசக்தி என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நரம்பியல் பிரச்சினை தொடர்பாக தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்து இருந்தார். தொடர்ந்து நரம்பியல் சிகிச்சைக்காண மருந்துகளை உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவர் பரிந்துரையின் பேரில் ராமராஜ் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தபோது தலைப்பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கட்டிகளை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டதை தொடர்ந்து புற்றுநோய்க்கான மருந்துகளையும், நரம்பியல் நோய்க்கான மருந்துகளையும் மேற்கொள்ள ராம்ராஜ்க்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புற்றுநோய்க்கான மருந்துகளை மதுரை அரசு மருத்துவமனையில் மாதம் ஒரு முறை பெற்றுக் கொள்ளவும் நரம்பியல் சிகிச்சை தொடர்பான மருந்துகளை அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கடந்த 11ஆம் தேதி பூதிப்புரம் அரசு மருத்துமனையில் பெற்ற நரம்பியல் மருந்துகளை உட்கொள்ளும் போது அவரின் உடல்நிலையில் சிறிது மாற்றங்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் திடீரென அவரின் கை கால்கள் செயலிழந்து உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.