தேனி: பெரியகுளம் நகராட்சியில் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் ராம்கோ நிறுவனம் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஆறு மாதமாக ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதாகவும், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் இன்று வரை ஊதியம் வழங்காததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து விட்டு வள்ளுவர் சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஒப்பந்த தூய்மை பணியாளர் கூறுகையில், "நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றி மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாற்றும் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை. அரசு நிர்ணயித்த ஊதியத்தில் பிஎஃப் பணம் எவ்வளவு பிடித்தம் செய்கிறார்கள் என்ற விபரத்தையும் ஒப்பந்ததாரர் வழங்குவதில்லை என்றும், தங்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.