தனது சொந்த தொகுதியான பெரியகுளம் தனித் தொகுதியானதிலிருந்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தத்தெடுத்துக் கொண்டது போடிநாயக்கனூர் தொகுதி. அந்தத் தொகுதியை ஓபிஎஸ் தத்தெடுத்துக் கொண்டார் என்றால் அது மிகையல்ல.
சமுதாய வாக்குகள்தான் இதற்கான முதல் பிணைப்பு என்றாலும், அதைத் தாண்டிய புரிதலும் ஓபிஎஸ்ஸுக்கும் தொகுதிவாசிகளுக்கும் இடையில் இருப்பதை அவரது பரப்புரை உணர்த்துகிறது. இந்தப் பிணைப்பின் நம்பிக்கையில் மூன்றாவது வெற்றிக்காக மீண்டும் போடியில் போட்டியிடுகிறார் ஓ. பன்னீர்செல்வம்.
சொந்த வீட்டிற்கு வருவதுபோலவே இயல்பாகத் தொகுதிக்குள் நுழைகிறார். தன்னை வரவேற்க காத்திருக்கும் தொண்டர்களை இன்முகத்துடன் எதிர்கொள்கிறார். தனக்கு அணிவிக்க வரும் பொன்னாடைகளைத் தொண்டர்களுக்கே தன் கையால் அணிவித்து அதிமுகவில் கடைக்கோடி தொண்டனும் தலைவனாகலாம் என்ற அதிமுகவின் கொள்கையை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உலகறியவும் செய்கிறார்.
பரப்புரையில் கடந்த பத்தாண்டுகள், தொகுதிக்கு என்ன செய்தேன் என்பதைக் கூறி, பணிகளைத் தொடர மீண்டும் வாய்ப்பு கேட்கிறார் ஓபிஎஸ். இடைமறிக்கும் தொகுதிவாசிகள் விட்டுப்போன தங்கள் தேவைகளைச் சொல்ல அக்கறையுடன் அதனைக் கேட்டு, தேர்தலுக்குப் பின் தேவையைப் பூர்த்திசெய்வதாகச் சொல்கிறார். அந்த வாக்குறுதியில் தெரிகிறது வேட்பாளர்-தொகுதிவாசிகள் இருவர்களது நம்பிக்கை.
காலையில் தொடங்கி இரவு வரை நீளும் இந்தப் பரப்புரை பரபரப்புகளுக்கிடையில் நம் ஈடிவி பாரத்திடம் தேர்தல் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் ஓபிஎஸ்.