தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2020, 6:07 PM IST

ETV Bharat / state

தேனி - சென்னை காரில் பயணம்; ஓபிஎஸ்ஸின் ராஜதந்திரம் என்ன?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இரண்டு நாட்களாக சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கியிருந்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று மீண்டும் சென்னை புறப்பட்டார். வெற்றியுடன் திரும்பி வாருங்கள் என முழக்கங்களை எழுப்பி அவரின் ஆதரவாளர்கள் வழி அனுப்பி வைத்தனர்.

deputy cm ops moving from theni to chennai
deputy cm ops moving from theni to chennai

தேனி: இரண்டு நாட்கள் சொந்த ஊரில் தங்கியிருந்த துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்குமிடையே சலசலப்பு ஏற்பட்டுவருகிறது. இதனால் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து வந்த ஓபிஎஸ், அக்டோபர் 2ஆம் தேதி ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மட்டும், முதலமைச்சருடன் பங்கேற்றுவிட்டு அன்றிரவே சொந்த ஊரான தேனிக்கு வந்தடைந்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹார தெருவிலுள்ள அவரது வீட்டில், தனது பேரனின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு அன்றைய தினம் இரவு கைலாசபட்டி பண்ணை வீட்டில் தங்கினார்.

துணை முதலமைச்சரின் வருகையை அறிந்த அவரது ஆதரவாளர்கள், பண்ணை வீட்டில் சனிக்கிழமை காலையிலே குவியத் தொடங்கினர். இரண்டு நாட்களாக சென்னை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினர், முன்னாள், இன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோரை ஓபிஎஸ் சந்தித்துப் பேசினர்.

இதனையடுத்து தேனி மாவட்டத்தில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்க விழாவில் இன்று (அக். 5) பங்கேற்க வந்தவருக்கு, ‘நாளைய முதல்வர்’ என 100அடி நீளமுள்ள பேனர் வைத்து அதிமுகவினர் தேனியில் வரவேற்பளித்தனர். இதனால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இதனிடையே தமிழ்நாட்டு மக்கள், அஇஅதிமுகவின் தொண்டர்கள் என அனைவரின் நலன் கருதியே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ! அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ! அது நன்றாகவே நடக்கிறது! எது நடக்கவிருக்கிறதோ! அதுவும் நன்றாகவே நடக்கும்! என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

சென்னை புறப்பட்ட ஓபிஎஸ்

இதனைத் தொடர்ந்து சென்னையில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் கே. பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். மேலும், மாலை 5 மணியளவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரையும் சந்தித்துப் பேசினார். இந்த பரபரப்பான சூழலில், ஓபிஎஸ் இன்று சென்னைக்கு மீண்டும் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக பெரியகுளம் அக்ரஹார தெருவிலிருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்த ஓபிஎஸுக்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினர் 30-க்கும் மேற்பட்டோர் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். சென்னை செல்வதற்கு காரில் ஏறி புறப்பட்ட ஓபிஎஸ்ஸை "வெற்றியுடன் திரும்பி வாருங்கள்" என அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பி வழியனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details