கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பலரும் கள்ளச்சாராயம் காய்ச்சும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்ட வனப்பகுதிகளில் கள்ளச்சாராயத்தின் உற்பத்தியும், விற்பனையும் அதிகளவு நடைபெற்று வருகின்றன.
மூணார், அடிமாலி, நெடுங்கண்டம், அணக்கரை, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிக்கும் சாராயத்தை பறிமுதல் செய்து அதனை வனப்பகுதியில் வைத்தே கேரள மாநில காவல்துறையினர் அழித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், மூணார் பகுதியில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய தம்பதியினரைக் கைது செய்ய முயன்றபோது காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூணாறு அருகே உள்ள உப்புதரா பகுதியை சேர்ந்த ஜோய் மற்றும் அவரது மனைவி பின்ஸி. இவர்கள் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
போலீசாரைத் தாக்கிய கள்ளச்சாராயம் காய்ச்சிய தம்பதி இதன்பின், அவர்களை கைது செய்ய முயன்றபோது, தம்பதியினர் இருவரும் இணைந்து காவலர்களை கடப்பாறையால் தாக்கியுள்ளனர். இதில் சில காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து காவலர்களைத் தாக்கிய பெண்ணையும் அவரது கணவரையும் கைது செய்து பீர்மேடு காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஊரல்களில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாரயத்தை தரையில் ஊற்றி காவல்துறையினர் அழித்தனர்.
இதையும் படிங்க:புதுக்கோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!